பேருந்து பயணத்திற்கான காலப்பயணம் | Hyperloop Tamil Science Fiction Short Story

 

எங்கு நோக்கினும் இயந்திரத்தின் ஆதிக்கம். அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், தானாக அழைத்துசெல்லும் இயந்திர வாகனங்கள், அதற்குத்தேவையான மின்சாரமேற்றும் அங்கங்கு நிறுவப்பட்ட மின்னேற்றும் கம்பங்கள், இதற்கிடையே சாலை பயணிகளை ஒழுங்குபடுத்தும் ஒளிரும் சாலையோர திரைகள் மற்றும் சாலையை கண்காணிக்கும் பறக்கும் பறகலம். நித்தம் தேனை தேடித்தேடிஎடுத்துக்கொண்டு தன் கூட்டை அடைந்து தேனை அங்குச் சேமித்து அதைச் சுற்றி சுற்றி வரும் தேனீக்கள் போல, பல அடுக்குமாடி கட்டிடங்களிலிருந்து வேகமாக வெளியேறும் மனிதர்கள், எதையோ தேடுவதைப்போல பறந்தோடி மாலையில் வீட்டை அடைகின்றனர்.

வீட்டினுள் நாற்காலியில் அமர்ந்துகொண்டிருந்த ராஜேஷை அப்பாஎன்று உரத்த குரலில் பன்னிரண்டு வயதுள்ள கிருஷ் அழைத்தான். சொல்லுப்பாஎன்று பொறுமையுடன் அவன் அப்பா ராஜேஷ் வினவினார்.
அப்பா, என்னோட இந்த அசைன்மெண்ட செக் பண்ணி அக்னாலட்ஜ் பண்ணுங்க பாஎன்று கேட்டு தன் கையில் இருக்கும் சற்று சிறியதாகத் தோற்றமளிக்கும் கணினி ஒன்றை அப்பாவிடம் கொடுத்தான் கிருஷ். ராஜேஷும் அதன் திரையை மேலும் கீழுமாக இழுத்துவிட்டு குட், வெரி குட்என்று பாராட்டிவிட்டு ஏதோ கடவுச்சொல்லை உள்ளீடு செய்து அக்னாலட்ஜ் செய்தார். திரையில் யுவர் அக்னாலட்ஜ்மென்ட் ஹாஸ் பீன் ரிசீவுட் ஆன் 13th நவம்பர் 2108என்று தோன்றி மறைந்தது.

ஆம், இது இருபத்து இரண்டாம் நூற்றாண்டில் நடக்கிற ஒரு கற்பனை கதை. இக்கதையில் எதிர்காலத்தில் அறிவியலின் தாக்கம் எப்படி அமையும் மற்றும் அதனால் உண்டான மாற்றம் போன்றவற்றில் ஒரு சிறு கோணம் எவ்வாறு இருக்கும் என்பதன் ஒரு புனைவாகவே சொல்லப்பட்டு இருக்கும். இதுவும் நிகழலாம் என்பது என்னுடைய ஊகம். தங்களை எதிர்காலத்திற்கு அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள், இனி கதையை தொடரலாம்.

கிருஷ் அப்பா இன்னிக்கி சீக்கிரம் வந்திருங்க. நானும் ஸ்கூலுக்கு போயிட்டு சீக்கிரம் வந்திருவேன், எங்கயும் போக மாட்டேன்என்று கூறிவிட்டு தன் சிறிய கணினியை ஒரு சிறு பைக்குள் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினான். அப்பாவும் சிரித்துக்கொண்டே சரிப்பாஎன்று அவன் பின்னால் வந்து வழியனுப்பினார். வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த  ஒரு சிறு வாகனம் அது. இரு சக்கரங்களை கொண்டது, ஒரு நபர் மட்டுமே அமரக்கூடியது. நாற்காலி போன்ற தோற்றம் கொண்டது. நாற்புறத்திலும் கண்ணாடியால் சூழப்பட்டு, கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்ட வாகனம் அது. அது தானாக ஓடும் கணினியால் கட்டுப்படுத்தப்படும் வாகனமாகும். மிகவும் குறைவான அல்லது மனிதனின் உந்துதல் இல்லாமல் செல்லக்கூடியது.

கிருஷ் ஒரு கம்பத்தில் வாகனத்துடன் இணைக்கபட்டிருந்த மின்கம்பியை உருவிவிட்டான். அது மின்னூட்டம் பெற்றுக்கொண்டிருந்தது போலும். கிருஷ் வாகனத்தின் ஒரு பொத்தானை அழுத்தியவுடன், மெதுவாக சில விளக்குகள் எரிய ஆரம்பித்து ஒரு சில ஒலிகளை எழுப்பியது. பிறகு பை பா, பை மாஎன்று கூறிவிட்டு அந்த வாகனத்தில் நகர்ந்தான். சற்று தூரத்தில் அதேபோன்று இன்னும் சில வாகனங்களும் அவனுடன் இணைந்தன. அது அவனுடைய நண்பர்களின் வாகனங்கள். அதை வேடிக்கை பார்த்துவிட்டு முகத்தில் சிறு புன்னகையுடன் வீட்டினுள் நுழைந்தார் ராஜேஷ். "நானும் கெளம்புறேன்மா, இன்னிக்கி முடிஞ்சா சீக்கிரம் வரப் பார்க்கிறேன். ஆபீஸ்க்கு டைமாச்சு. டென் மினிட்ஸ் மோர், மெசேஜ் வந்திருச்சி. பை சத்யா" என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு தன் மடிக் கணினியை எடுத்துக்கொண்டு ராஜேஷும் வீட்டை விட்டு வெளியேறினார்.

தனக்கு வந்த மெசேஜை திரும்ப எடுத்து வாசித்தார். அதில் திருச்சியிலிருந்து மும்பை வரை, நபர் 1, புறப்படும் நேரம் காலை 10 மணி, சேரும் நேரம் காலை 10.13 மணிஎன்று இருந்தது. அதை வாசித்துக்கொண்டே தன் மகன் வைத்திருந்த அதே மாதிரியான மற்றொரு வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றார். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தன்னுடைய வாகனத்தையும் நிறுத்தினார். அவருடைய நண்பர்கள் சிலரும் அவருடன் இணைந்தனர். ஒருவருக்கொருவர் அரட்டை அடித்துக்கொண்டே கட்டிடத்தினுள் நுழைந்தனர். மிகப் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கக் கூடிய அக்கட்டிடத்தில் பல அடுக்குகளும், அதனுள் பல கடைகளும் பிரமிக்கத்தக்க வகையில் தோற்றமளித்தது. அங்கே நிறைய மனிதர்கள் அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தனர். 

அந்தக் கட்டிடம் வேறொன்றுமில்லை, அது ஒரு ஹைபர்லூப் ஸ்டேஷன். பிறகு அங்கிருந்த ஒரு கதவின் வழியே உள்நுழைந்தனர். அங்கிருந்த காப்பாளர் ஒருவர் உள் நுழைபவர்களைச் சோதனை செய்து அனுமதித்தார். ராஜேஷ் சிறிது தூரம் நடந்த பிறகு, "இந்தப்பக்கம் வாருங்கள் இங்கதான் பேசஞ்சர் டிராவல் டிராக் இருக்கு, அந்தப் பக்கம் லக்கேஜ் டிராக்" என்று கூறி அக்கட்டிடத்தின் வழிகாட்டுபவர் ஒருவர் வழி காட்டினார். அனைவரும் பயணிகள் நிற்கக்கூடிய தளத்தை அடைந்தனர். 

அங்கு இன்னொருவர் "சார் உங்களுடைய டிராவல் சூட்டை அணிந்து கொள்ளுங்கள். அப்படியே இதையும் அணிந்து கொள்ளுங்கள்" என்று கண் மற்றும் தலையை பாதுகாக்கும் கருவி ஒன்றைச் சுட்டி காட்டினார். அனைவரும் அவற்றை அணிந்துகொண்டு மிக நீளமாகத் தோற்றமளிக்கக்கூடிய பெரிய ரயில் போன்ற வாகனத்தில், அதாவது ஹைபர்லூபினுள் நுழைந்தனர். 

அங்கே அவரவர்களுக்கென்று இருக்கைகள் இருந்தது. அனைவரும் அமரவைக்கப்பட்டு, பாதுகாப்பு உபகரணங்கள் அணியப்பட்டு தயார் படுத்தப்பட்டனர். கண்காணிக்கும் கணினி ஒன்றிலிருந்து அனைவரையும் இந்த ஹைபர்லூப் வரவேற்கிறது”, “ஹைபர்லூப் புறப்பட தயார் நிலையில் உள்ளது, அனைவரும் தங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்என்பது போன்ற எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டு சிறிது நொடிகளில் வாகனம் புறப்பட்டது. அடுத்த 13 நிமிடத்தில், “மும்பை சேருமிடம் வந்ததுஎன்றும் அனைவரும் இறங்குமாறும் ஒலித்தது. 

ராஜேஷ் அவருடைய நண்பர்களுடன் மும்பை ஹைபர்லூப் நிலையத்தில் இறங்கிவிட்டு, அனைத்து பாதுகாப்பு உடைகளையும் கலைத்தார். பிறகு அனைவரும் அதை விட்டு வெளியேறி, அங்கு அவர்களை எதிர்நோக்கிக் கொண்டிருந்த அவரவர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட மின்சார வாகனத்தில், அருகில் இருக்கும் தங்களுடைய அலுவலகத்திற்கு போய்ச் சேர்ந்து வழக்கமான பணியை தொடர்ந்தனர். இடையில் மதிய உணவு இடைவேளை மற்றும் நண்பர்களுடன் அரட்டை. மாலை வேலை முடிந்து இரவு நெருங்கியது. அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர்.

சற்று வேலைப்பளு காரணமாக, ராஜேஷ் வழக்கம் போல் தாமதமாக அலுவலகத்தை விட்டு வெளியேறினார். அங்கிருந்து மும்பை ஹைபர்லூப் ஸ்டேஷன் வந்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட தளத்திலுள்ள ஹைபர்லூபில் ஏறி திருச்சியை அடைந்தார். தன் மகன் இந்நேரம் வீட்டை எனக்காகக் காத்திருப்பான் என எண்ணிக்கொண்டே, தன் வீட்டைப் பற்றி இன்னும் சில எண்ணங்களை மனதினில் ஒட்டிக்கொண்டே அங்கிருந்து தன் வாகனத்தை எடுத்து சிறிது நேரத்தில் தன் வீட்டையும் அடைந்தார். இதுதான் ராஜேஷ் உடைய வழக்கமான வாழ்க்கை.
வீட்டை அடைந்ததும், கிரிஷ் "அப்பா இனிக்கும் லேட்டா ?. இன்னிக்கும் வெளில கூட்டிட்டு போகமுடியாதா ?" என்றான் ஏக்கத்துடன்.
ராஜேஷ் சரிப்பா, டுமாரோவ் லீவ் தான. உன்ன ஒரு மியூசியத்துக்கு கூட்டிட்டு போறேன் டா, ஒகே வாஎன்றார் முகத்தில் களைப்புடன்.
சரிப்பாஎன்று சிரித்துக்கொண்டே சாப்ட போலாம்பாஎன்று அழைத்தான். அனைவரும் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டுத் தூங்க சென்றுவிட்டனர்.

மறுநாள் காலையில் எழுந்து, விடுமுறை என்பதால் ராஜேஷ் குடும்பத்துடன் தன்னுடைய நான்கு சக்கர மின்சார வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் அருங்காட்சியகம் சென்றார்.
செல்லும் வழியில் கிருஷ் அப்பா நம்ம போற எடத்துல என்னப்பா இருக்கும் ? எனக்கு அங்க நீங்க எத்தாசும் வாங்கித்தாங்கப்பாஎன்று சில கேள்விகளையும், கோரிக்கைகளையும் வைத்துக்கொண்டே வந்தான்.
அருங்காட்சியகத்தை அடைந்தவுடன் ராஜேஷ் தன்னுடைய போனை நுழைவாயிலின் அருகே ஒரு திரை இயந்திரத்தில் காண்பித்து அனுமதி பெற்று நுழைந்தார். அது ஒரு பறந்து விரிந்த கட்டிடம், அதைச்சுற்றி நிறையச் செயற்கையாக புற்கள் மற்றும் பறவைகள், விலங்குகள் மாதிரிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கங்கு தொடுதிரைகள் பொருத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு வேண்டிய தகவலை அவரவர்களே தெரிந்துகொள்ளத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருந்தது. உள்நுழைந்தவுடன் ஒரு வரவேற்பு இயந்திரம் அவர்களை வரவேற்று வழிகாட்டியது.

கிருஷ் அப்பாவாங்க, அங்க போகலாம்என்று கை காட்டி நிறையப் பொம்மைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துசென்றான். அது பழைய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மாதிரிகள். அங்குக் காற்றாடி, ஸ்கூட்டர், பைக், விளக்கு, பெட்ரோல் வாகன மாதிரிகள் போன்று நிறைய இருந்தன.

கிருஷ் அங்கிருந்த ஒரு பெரிய அளவிலான மாதிரியைக் காட்டி அப்பா இது என்னப்பா இவ்வளவு பெருசா இருக்கு, நம்ம போற டிராவல் ஹைபர்லூப் மாதிரி இருக்கு. ஆனா அதுல இது பாதி சைஸ் தான். இது டிப்பரன்டான சேப்புல இருக்கு. அப்புறம் சீட் எல்லாம் நெறைய சின்ன சின்னதா இருக்கு. முன்னாடி கண்ணாடி, விண்டோலாம் இருக்கு. என்னப்பா இது.என்று மிகுந்த வியப்புடன் வினவினான்.

ராஜேஷ் இதுதான்பா பஸ். பேருந்து-ன்னு தமிழ்ல சொல்வாங்க. அந்த காலத்தில் நிறையப் பேர் இதுலதாம்பா ஊருக்குப் போனாங்க. அதிகமா எம்பதுல இருந்து நூறு கிலோமீட்டர் ஸ்பீட்ல போகும் டா கண்ணா. எங்க ஆபிசுக்கு போணும்னா 22 மணிநேரம் ஆகும் டா”.

சத்யா, “அடேயப்பா அவ்வளவு நேரம் ஆகுமா. இப்பவே லேட்டாதான் வரீங்க. பேருந்து-னா அவ்ளவுதான், அங்கேயே இருந்து வருஷத்துக்கு இரண்டு இல்லனா மூனு தடவதான் வருவீங்க போல.

ராஜேஷ் ஆமா சத்யா. எங்க அப்பா காலத்துல அப்படிதான் இருந்திச்சாம்.
கிருஷ் அப்படின்னா அவ்வளவு நேரமும் கண்ண மூடிகிட்டு, டிராவல் சூட் போட்டுட்டு இருகனுமாப்பா

ராஜேஷ் இல்லடா, இதுல அப்படில்லாம் இருக்கத் தேவ இல்ல. இது கம்மி ஸ்பீட் தானே. டிராவல் சூட், பெல்ட், ஐ கிளாஸ் எதுவும் போட தேவ இல்ல. நல்லா ஜாலியா உட்காந்துகிட்டு பக்கதுல இருக்குறவங்களோட பேசிகிட்டே போலாம்டா. பேமிலியோட போனா நிறைய நேரம் டிராவல் பண்ணலாம்டா கண்ணா. ஹ்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்டா. நான் சின்ன வயசுல போயிருக்கிறேன். அப்பறம், அதெல்லாம் பேன் பண்ணிட்டாங்க.

கிருஷ் ஏம்பா அப்படி பண்ணாங்க

ராஜேஷ் அதெல்லாம் பெட்ரோல்ல ரன் ஆகுறது. பெட்ரோல் ப்ரொடக்டிவிட்டி கம்மி ஆனதனால பேன் பண்ணிட்டாங்க”.

பிறகு அங்கிருந்து நகர்ந்து வேறோர் இடத்திற்கு வந்தனர்.

கிருஷ் அப்பா அப்பா !!! என்று மிகவும் வியப்புற்று அழத்தான்.
கிருஷ் அது என்னப்பா ! நம்ம பாத்த அந்த பஸ்ஸ விட பெருசா இருக்கு

ராஜேஷ் ஓ ! அதுவாப்பா. அது ரயில் பா. இங்க நிறைய பொட்டிங்க இருக்குதுல்ல, அதனால இன்னும் நெறைய பேர் போலாம்பா. பாத்தியா ! நல்ல இருக்கா !.

அவற்றைப்பற்றி ராஜேஷ் தன்னுடைய தந்தை கூறியதையும், தன்னுடைய சிறு வயது அனுபவத்தையும் சேர்த்து கிருஷிடன் கூறிக்கொண்டே வந்தார்.

ராஜேஷ் அதைப்பற்றிக் கூறிய விதத்தைக்கேட்டு கிருஷ்-ன் கற்பனை வளர ஆரம்பித்தது. தானும் அது போன்றதொரு வாகனத்தில் நீண்ட நேரம் தன் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் பயணிக்க ஆவல் கொண்டான். இவ்வாவல் ராஜேஷின் இதயத்திலும் ஒரு ஓரத்தில் பதுங்கி இருக்கிறது என்பதை அவர் கூறிய வார்த்தையின் பொருளிலிருந்து உணரமுடிகிறது அல்லவா. ஏன் இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் உள்ளவர் அனைவருக்கும் இதே ஆசையே !!.

இவ்வாசை தோன்ற முக்கிய காரணம் நிச்சயம் உள்ளது. இருபத்து இரண்டாம் நூற்றாண்டில் நீண்ட நேரப் பயணம் என்பது முற்றிலுமாக மாற்றப்பட்டது. அதிபட்சமாக ஒரு மணி நேரமே ஆகும் நம் கண்டத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்வதற்கு. அது ஹைபர்லூப் என்ற கண்டுபிடிப்பின் தாக்கமே. அது அசுர வேகம் செல்வதால் பயணம் செய்வோர்கள் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் தயார்படுத்தப்பட்டு இருப்பர். கிட்டத்தட்ட விண்வெளி வீரர்கள் அமர்ந்திருப்பது போன்று. இதனால் பக்கத்தில் முகம் பார்த்து பேச இயலாது. கம்பியில்லா ஒலிபெட்டி வழியே தான் மற்ற பயணிகளுடன் பேச இயலும். அதுவும் சிறிது நேரத்திற்கே. அதற்குள் சேருமிடம் சட்டென்று வந்துவிடும். இதில் சன்னல் வழி காட்சிகள் இல்லை, மாறாக திரைக்காட்சிகளே. பயணக்களைப்பு, நீண்ட பயணத்தூக்கம் என்ற அனுபவமே இல்லாமல் போனது.

ராஜேஷ் அங்கிருந்த கடை ஒன்றில் பேருந்து மற்றும் ரயிலின் மாதிரி பொம்மைகளை தன மகன் கிருஷுக்கு வாங்கிக் கொடுத்தார். பிறகு மியுசியத்தை முழுவதுமாக சுற்றி முடித்து விட்டு, அதன் வெளிய அழகாகச் செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட ஒரு புல் தரையில் சற்று அமர்ந்து களைப்பாறினார்.

கிருஷ் அந்தப் பொம்மை மாதிரிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில், ராஜேஷ் தன மனைவியிடம் மீண்டும் அந்த காலத்தில் உள்ளதுபோல் ஒரு நாளாவது இருக்க வேண்டும், அதே போல் நீண்ட தூர பயணம், நீண்ட நேரப் பயணத்தை தன் குடும்பத்துடன் தான் செல்லவேண்டும் என்று மிகவும் ஆசையோடு சொல்லிக்கொண்டிருந்தார்.

ராஜேஷ் சத்யா, அப்ப எனக்கு ஒரு ஆறு வயசு இருக்கும். அப்பதான் எங்க அப்பாகூட எங்க மாமா வீட்டுக்கு ஸ்கூல் ஹாலிடே ல திருச்சிலேர்ந்து சென்னைக்குப் போனேன். கவர்மெண்டு பஸ். பகல்ல போனோம். அப்படியே எங்க அப்பாகூட நிறைய பேசிகிட்டே போனேன். நடுவுல நடுவுல, எத்தாசும் வேடிக்க பாத்துகிட்டே, சினாக்ஸ் சாப்பிட்டிகிட்டே போனோம். அப்பா காலேஜ் ப்ரோபெசர்ன்றதனால நெறைய அறிவியல் சம்பந்தமா கதை, புதிர் சொல்லிட்டே வருவார். எட்டு மணி நேரம் ஆச்சி சென்னைக்கு வர. அதுதான் நான் போன கடைசி பஸ் டிராவல். அப்பறம் ஒரு நாள் முதன் முதலா விட்ட ஹைபர்லூப் டிரெயின்ல போனேன் அதே மாமா வீட்டுக்கு. சுமார் ஐம்பது நிமிஷம் ஆச்சி. ஆனா இப்ப நிலைமையே வேற. இப்ப வந்தது எல்லாத்தையும் தூக்கி சாப்டிடிச்சி, அசுரவேக ஹைபர்லூப். அப்கிரேடட் வெர்சன். ஏறுனா அடுத்த அஞ்சி நிமிஷத்துல சென்னைல இருப்பேன். ஆனா ஒன்னுடி, இப்ப நெனச்சாலும் அந்த மாதிரி எங்க அப்பா கூட டிராவல் பண்ண முடியாதுடி.

சத்யா ம்ம்...ஆமாங்க...என்று ஏக்கத்துடன் வழிமொழிந்தால்.

ராஜேஷ் இப்ப ஒரு டைம் மெசின் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும் டி சத்யாஎன்று மிகவும் கனத்த மனத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தனர், மீண்டும் தங்களுடைய வழக்கமான வாழ்வில் திரும்புவதற்கு.

இப்போது நாம் நம் நிகழ்காலத்திற்கு வருவோம். நம் கடந்த கால மற்றும் நம் மூதாதையரின் பயணங்கள் எவ்வாறு இருந்தது என்று சற்று எண்ணிப்பாருங்கள். இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் நடைப் பயணம், மாட்டுவண்டிகள் பயணம், குதிரை வண்டிகள் பயணம் போன்ற பயண முறைகள் இருந்தன. அப்போது மிக நீண்ட தூர பயணத்தை மேற்கொள்கையில், நீண்ட தூர பயணத்துடன் நீண்ட களைப்பும், பயண தூக்கம், இடையிடையே சற்று நேரம் ஓர் ஆலமர நிழலில் தங்கி அங்கேயே உணவு மற்றும் தூக்கம், சேருமிடம் வந்ததும் நமக்கு ஏற்படும் அற்புத ஆனந்தம் நிச்சயம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இப்போது அதை யார் தருவார். மாட்டுவண்டி, குதிரை வண்டி பயணத்தின் போது வரும் வழியெல்லாம் இயற்கையை ரசித்தபடியும், வழித்தடங்களில் எழுப்பப்பட்டிருக்கும் கோயில்களுக்குச்சென்று தங்கி, தரிசனம் பெற்று, மனம் குளிர உபன்யாசம் கேட்டு வரும் வாய்ப்புகள் இருந்தன. இது போன்று சொல்வதற்கு இன்னும் ஏராளம் உள்ளன. பயண எல்லையை அடைந்ததும் ஏதோ ஒன்றைச் சாதித்தது போல உணர்வு ஏற்படும். சற்று தங்களுக்கே ஒரு முறையாவது இப்படி நண்பர்களுடன் மற்றும் குடும்பத்துடன் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருகிறது அல்லவா. இது போன்ற அனுபவங்களை எட்டாக்கனியாக மாறுவதற்குள் அனுபவித்துவிடுங்கள். இல்லையேல் நிச்சயம் டைம் மெசினை தேடுவீர்கள் ராஜேஷ் போல.

மேலும் படிக்க Tamil Stories

காளானால் கனத்த இதயம்
ராட்சசன்


Post a Comment

Previous Post Next Post
Support @Amazon