Tamil Stories | Kathaigal | தமிழ் கதைகள் 

Rakshasha Tamil kathai | Tamil Stories
Aliens vs Ancients
முல்லை நிலத்தில் வாழும் சிறு கூட்டம்விவசாயம் செய்துதான் வாழவேண்டும் என்ற தேவையே இல்லாமல் ஆரோக்கியமான இயற்கையான வாழ்க்கை முறையை இயல்பாகவே வாழ்கின்றது. அப்பேற்பட்ட இடத்தில் அக்காலத்தில் வேலை செய்து பணம் சேர்ப்பது என்ற ஒரு அமைப்பே இல்லாமல் அந்த சிறு கூட்டம் மகாசமுத்திரத்தின் மத்தியில் உள்ள பரந்த நிலப்பரப்பில் தங்களை நிலை நிறுத்தி கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு வருடங்கள் ஆகிறது. 

அந்த மாதிரியான சொர்க்க வாழ்விற்கு காரணம் மிக அருகில் இருக்கும் ஒரு மலை. மகவும் அடர்ந்த காடுகள், அரியவகை மிருகங்கள், அரிய மூலிகைகள், மனதை மயக்கும் அருவி, மாயை உண்டாக்கும் மரங்கள், மிருகங்களை வேட்டையாடும் கொடிகள் என்றிருக்கும் மிகப்பிரம்மாண்டமான அந்த மலையை இதுவரை அந்த கூட்டத்தில் வாழும் எவரும் அறிந்ததில்லை. காரணம் அது ஆபத்து நிறைந்ததாக காணப்படும் அதே வேலையில் அதுவே அவர்களை காக்கும் கடவுள். அங்கிருந்து ஊற்றெடுத்து வரும் ஆற்றை நம்பியே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த ஆற்றின் நீரை குடித்து, மலையின் அடிவாரத்தில் உள்ள காட்டின் மரங்களின் கனிகளை உண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இதே சமயம் மலையில் மற்றொரு இனத்தவரும் வாழ்கின்றனர். அவர்கள் உருவத்தில் முல்லை வாசிகளை விட இரண்டு மடங்கு பெரியதாகவும் உயரமாகவும்கரிய நிறத்திலும் தோற்றமளிப்பர். மலையில் கிடைக்கும் ஒருவகை தாவரங்களில் இருந்து பிரிக்கப்பட்ட கயிறால் ஆன உடைகளை அணிந்திருந்தனர். தலையில் நீண்ட கூந்தல்பற்கள் சற்று கூர்மையாகவும்தனித்தன்மை வாய்ந்த கற்களால் ஆன மாலைகளையும் அணிதிருப்பர். உருவத்தில் சற்று ராட்சசர்கள் போல் காணப்பெருவர். ஆனால் உண்மையில் இவர்களே முல்லை வாசிகளின் கடவுள்களாக போற்றப்படுகின்றனர்.

அவர்கள் எப்போதாவது மலையிலிருந்து காட்டிற்கு இறங்கி வரும் பழக்கமுண்டு. அது ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒரு முறை நிகழும். அதனால் அம்மலையிலிருந்து வரும் அவர்களை மலையின் கீழ் காட்டில் வாழும் முல்லை வாசிகள் கடவுள் வருகையாகவே கருதினர். பத்தாண்டிற்கு ஒரு முறை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடுவர். அவர்களுக்கு தேவையான காய் கனிகளை படைத்ததுஆற்று நீரால் அபிஷேகம் செய்து மகிழ்வர். மலையில் இருந்து வந்த அவர்களும் இதை மகிழ்வுடன் ஏற்பர். மீண்டும் மலைக்கு போகும்போது மலையில் கிடைக்கும் அற்புத மூலிகைகளை பரிசாக அளிப்பர். இதை காட்டில் வாழும் கூட்டம் பத்திரமாக பதுக்கிஅவர்களுக்கு இன்னல்கள் நேரும்போது பயன்படுத்திகொள்வர்.

மலையினர் கீழிறங்கி வருவதற்கு ஒரு காரணமும் உண்டு. அது அவர்களின் புதையல். ஆம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மலையினர் பத்தாண்டுக்கு ஒரு முறை வருவதும் போவதுமாக இருகின்றனர். அவர்களுக்கு இந்த காட்டில் வாழு கூட்டம் எங்கிருந்தோ வந்த குடியேறிகள் அவ்வளவே. மலையினர் தங்களின் புதையல்களை அந்த கூட்டம் குடியேறும் முன்னரே அவர்கள் வாழும் அந்த மண்ணிற்குள் புதைத்து வைத்திருந்தனர். அதை பாதுகாக்கவே ஒவ்வொரு பத்தாண்டிருக்கு ஒருமுறை கீழிறங்கி வருவர்.

ஆனால் இதில் விசேஷம் என்ன வென்றால்அவர்கள் உருவத்தில் அரக்கர்கள் போல் என்றாலும் உள்ளத்தில் சற்று கருணை கொண்டவர்கள். அதனால் அங்கு வந்த குடியேறிகளை எதுவும் செய்வதில்லை. மாறாக தங்கள் புதையலின் ரகசியத்தை மட்டும் மறைத்து வைத்திருந்தனர். பத்தாண்டிருக்கு ஒரு முறை வந்து கண்காணித்துஅங்கு வாழும் மக்களுக்கும் நோய் நொடிகள் எதுவும் அண்டாமல் பார்த்துகொண்டனர். ஏனென்றால் காட்டில் வாழும் முல்லை வாசிகளை மலையினர் தங்கள் புதையலின் காவலர்களாக பாவித்தனர்.

புதையல் என்ற ஒன்று இருந்தாலே அதை அடைய முயற்சிப்பவர் நிச்சயம் இருப்பர். இப்படியிருக்க ஒரு நாள் அந்த புதையலுக்காக அரங்கேறியது அந்த யுத்தம். யார் அவர்கள்எங்கிருந்து வந்தனர்ஏன் முல்லை வாசிகள் மீது தாக்குதல் நடத்தினர்சரி குழப்பாமல் கூறுகிறேன்.

அந்த புதையலின் அருமையை உணர்ந்திருந்த வேற்று உலக இனத்தவர். இவர்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக பூமியைக் கண்கானித்துகொண்டு இருந்தனர். ஒவ்வொன்றாக உணர்ந்து அறிந்து, என்ன இருக்கிறது மற்றும் என்ன நடந்து கொண்டிருக்கிறது போன்றவற்றை நோட்டம் விட்டுகொண்டிருந்தனர். இதை அவர்களின் பறகலன் ஒன்றின் மூலம் செய்துகொண்டிருந்தனர்.

சரியான நேரம் வந்த போது அந்த புதையலை அடைய தாக்குதல் நடத்த ஆயத்தமாயினர். முதலில் தங்களுடைய பறகலங்கள் மூலம் முல்லை இனத்தவரின் குடியிருப்புகளின் மேல் நேராக வானில் வட்டமிட்டனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் ஒரு சில ஒலிகளை எழுப்பினர். இதை கண்டுகொண்ட மலையினர் எதோ ஆபத்து வந்ததாய் உணர்ந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கலாயினர். மேலும் அந்த ஆபத்து தங்களுடைய புதையலுக்காக இருக்கலாம் என்று எண்ணி மலையினரின் ஒரு பகுதிபேர் தங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு முல்லை நிலத்தை நோக்கி மின்னல் வேகத்தில் மலையை விட்டு இறங்கினர். இதுவரை அவ்வேகத்தில் அவர்கள் வந்ததே இல்லை.

முல்லை நிலத்தவர் அந்த ஒலிகளை கேட்டு புரியாமல் திகைத்தனர். அஞ்சி நடுங்கலாயினர். முல்லை வாசிகள் அனைவரும் மலையினரால் கட்டி கொடுக்கபட்டிருந்த அவசரகால காக்கும் கரங்கள் எனப்படும் ஒரு கட்டிட அமைப்பில் தஞ்சம் புகுவதற்கு விரைந்தனர். அதற்குள் வேற்றுலக வாசிகள் தாக்குதல்களை தொடுத்தனர். மேலிருந்து சில கற்கள் போன்ற பொருட்களை முதலில் வீசினர். முல்லை வாசிகள் அலறியடித்துக்கொண்டு இப்போது எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் அங்கேயே சுற்றி திரிந்தனர்.

இவ்வளவு தாக்குதல்கள் நடத்தியும் இவர்கள் எங்கும் செல்ல மாட்டார்களா? என நினைத்த வேற்றுலக வாசிகள், தங்கள் வீரியத்தை அதிகரித்தனர். வானில் சற்று மேலே பறகலனை உயர்த்தி வெடிக்கும் கற்களை கீழே எறிந்தனர். அது வரும் வேகத்தில் பயங்கர ஒலியை ஏற்படுத்தியது. தங்களுக்கு சாவு உறுதி என்று மனதில் நிலை நிறுத்தி முல்லை வாசிகள் அலறினர். வரும் வேகத்தில் கற்கள் காற்றின் உராய்வினால் சட்டென்று தீப்பிடித்தது. அது ஒருவகையான நெருப்பை உருவாக்கும் கற்கள். அதனால்தான் காற்றின் உராய்வினாலேயே தீ பற்றியது.

கற்களில் பற்றிய வெப்பத்தால் அது வரும்போதே சுற்று சூழலில் வெப்பத்தை அதிகரித்தது. முல்லை வாசிகளுக்கு இதை எல்லாம் செய்வது யார் என்பது விளங்கவில்லை. ஆனால் மேலிருந்து மட்டும் எதோ நம்மை தாக்குகிறது என்று உணர்ந்திருந்தனர். ஆனால் என்ன என்பதை பார்க்கமுடியாத அளவில் பறகலங்கள் மிகவும் உயரத்தில் நிலைபெற்றிருந்தது.

வரும் கற்களின் வெப்பம் தாங்கமுடியாத அளவுக்கு அதிகரிக்க ஆரம்பித்தது. வெப்பம் தாங்க முடியாமல் முல்லை வாசிகள் அலறிகொண்டிருந்த போது வெப்பம் திடீரென குறைந்து புகை மூட்டம் சூழ ஆரம்பித்து. முல்லை வாசிகள் என்ன நிகழ்கிறது என்று சற்று வானைப் பார்த்தனர். ஒன்றும் பிடிபடவில்லை. மீண்டும் மேலிருந்து அடுத்த கற்களை வருவதை கண்டனர். அதுவும் வந்த சற்று நேரத்தில் வானிலேயே சிதறியது. அட என்னடா இது! என்று திகைத்தனர். 

ஆம். குறிஞ்சி வாசிகள் அதாவது மலையினர், வருகை நிகழ்ந்தது. பரவிய புகை மூட்டங்களை கிழித்து தங்களின் ஆயதங்களால் சீறிப்பாயும் கற்களை நொறுக்கி எறிந்தனர். மலையிலிருந்து தரைக்கு இறங்கிக்கொண்டே, பதில் தாக்குதலை தொடுத்தனர். இதை பார்த்த முல்லை வாசிகள் ஆர்பரித்தனர். தங்களை காக்க தங்களின் கடவுள்கள் ஆயுதம் ஏந்தி வருகின்றனர் என்று கூக்குரலிட்டனர். சற்று நிம்மதியடைந்து காக்கும் கரங்களை தஞ்சம் அடைந்தனர்.

அங்கிருந்து நடக்கும் அனைத்தையும் வியப்பில் பார்த்துகொண்டிருந்தனர். மலையினர் வெல்ல வேண்டும் என்ற ஆவல் கொண்டு வானத்தையும் நிலத்தையும் பார்த்துகொண்டிருந்தனர். அதே சமயம் தங்களின் கற்கள் உடைபடுவதை கண்ட வேற்றுலக வாசிகள் யார் இதை செய்தார்கள் என்று பார்த்தனர். லேசான புகை மூட்டம் இருந்ததினால் தெளிவாக அறியமுடியவில்லை. அதனால் பறகலனை சற்று கீழிறக்கினர்.

காதை கிழிக்கும் ஒலியுடன், சுழன்று கொண்டே தரையை அடைந்தது. முல்லை வாசிகள் மிகுந்த வியப்பு கலந்த அதிர்ச்சியுடன் கண்ணிமைக்காமல் பார்த்துகொண்டிருந்தனர். மலையினரின் தலைவர் ஒருவர் நீங்கள் மீண்டும் திரும்பி வந்து விடீர்களா என்று உரத்த குரலில் பேசினார். அதை கேட்ட மற்ற மலையினர் ஆச்சர்யம் அடைந்தனர். எப்படி தங்கள் தலைவருக்கு இவர்களை தெரியும்? யார் இவர்கள் என்ற வினா மனதில் எழுந்தது. ஒன்றும் புரியாத முல்லை வாசிகள் குழம்பிய நிலையில் தங்களுக்குள் பல்வேறு கதைகளை பேச ஆரம்பித்தனர். தங்கள் கடவுளுக்கும் இந்த வேற்று இனத்தவருக்கும் எதோ முன்பகை என்றும், இவர்களிடம் இருந்து தங்களை காப்பதற்காகவே இந்த கடவுள்கள் வாழ்கிறார்கள் என்றும் எண்ணிக்கொண்டனர்.

மலையின தலைவர் அவர்களை மீண்டும் திரும்புமாறு எச்சரித்தார். அவர்களுக்கு இந்த புதையல் கிடைக்காது என்றும், அதை அடைவது என்பது ஒருபோதும் முடியாது, வீண் முயற்சி வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் தங்களின் முயற்சியில் பின்வாங்க மாட்டோம் என்று எந்தவித அறிவிப்பும் இன்றி வேற்றுலகத்தார் ஆயுதமேந்தி தாக்க தொடங்கினர். இவர்களுக்கு சொன்னால் புரியாது செய்தால்தான் புரியும் என்று கூறி தலைவர் தாக்குவதற்கு கட்டளை பிறப்பித்தார்.

அவ்வளவுதான் அடுத்த கணமே இருபக்கமும் ஆயுதங்கள் சீறிப்பாய்ந்தது. பெரும் யுத்தம் ஒன்று அரங்கேறியது. இரு பக்கமும் போரிடும் வீரர்கள் பலத்த காயங்கள் அடைந்தனர். இருந்தாலும் போரினை நிறுத்தவில்லை. பயங்கர போராக மாறியது. இதற்கு என்னதான் முடிவு என்று யாராலும் கணிக்க இயலவில்லை. ஒரு வழியாக மலையினரின் மீதமுள்ளவர்கள் அசுர வேகத்தில் பாய்ந்தோடி வந்தனர். இவர்களின் வருகையை கண்ட வேற்றுலக தலைவர் இவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டு, இவர்களுடன் போரிட தங்களின் படை பலம் போதாது என்று தெளிந்து பின் வாங்க கட்டளை பிறப்பித்தார்.

உடனே அனைத்து வேற்றுலக வாசிகளும் தங்களின் பறகலனை அடைந்து வெகு விரைவாக தரையை விட்டு எழும்பினர். மலையின தலைவர் அனைவரையும் போரிட்டது போதும் அவர்களை விட்டுவிட உத்தரவிட்டார். 

பதுங்கியிருந்த முல்லை வாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தங்களுக்கு வந்த இன்னல் நீங்கியதை நினைத்து மகிழ்ந்தனர். பிறகு காக்கும் கரத்தை விட்டு வெளியேறி மலை வாசிகளை நோக்கி வந்தனர். ஆனால் மலையினர் தலைவன் இவர்களிடம் மன்னிப்பு கோரினார். முல்லை வாசிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கான காரணத்தை அன்புடன் வேண்டினர்.

மலையினர் தலைவன் இந்த தாக்குதலே தங்களால்தான் நிகழ்ந்ததென்றும், அதற்கு காரணம் இந்த நிலத்தின் அடியில் மறைக்கப்பட்டு இருந்த அவர்களின் புதையலே என்றும் உரைத்தார். ஆனால் முல்லை வாசிகள் இதை அறிந்தபின் பெருமிதம் கொண்டனர். தங்களுடைய கடவுள்களுக்கு தங்களின் நன்றிகடன் செலுத்தும் தருணம் இதுவே என்று கூறி, தாங்களே மீண்டும் அந்த பாதுகாப்பு பணியை தொடர அனுமதி கோரினர். ஆனால் மலையின் தலைவரோ அதை மறுத்து, மீண்டும் அவர்களுக்கு தங்களால் எவ்விதத்திலும் ஆபத்து நேரிடலாகாது என்று எண்ணி, கடந்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழாத ஒன்றை நிகழ்த்தினார்.

அதாவது நிலத்தின் கீழ் இருக்கும் தங்கள் புதையலை வேறோர் இடத்திருக்கு மாற்ற முடிவெடுத்தார். இதுவரை புதையலை யாரும் கண்ணால் கண்டவர் இல்லை, தலைவர் உட்பட. முல்லை வாசிகளை அவர்களின் இடத்திலேயே மீண்டும் வாழ்வதற்கு ஏற்பாடுகளையும் செய்தார். முல்லை வாசிகளோ அவ்வாறு புதையலை சிரமப்பட்டு வேறோர் இடத்திற்கு மாற்ற வேண்டாம் எனவும், தாங்கள் தங்கள் குடியிருப்புகளை மாற்றிகொள்கிறோம் எனவும் வினவினர். ஆனால் தலைவரோ வேற்றுலக வாசிகள் இவ்விடத்தை கண்டறிந்துவிட்டதாலேயே இவ்விடத்தை மாற்ற எண்ணினேன் என்று கூறி முடித்தார்.

பிறகு நிலம் பிளக்கப்பட்டது. அதிலிருந்து மணல் கற்கள் பாறைகள் என தோண்டி எறியப்பட்டு, தீ பிளம்பாக கண்கள் கூசும் அளவுக்கு ஒளி பொருந்தியதாக தக தக வென்று மின்னிய ஒரு பெரும் பெட்டி வெளியே எடுக்கப்பட்டது. அடுத்தடுத்து இதே போன்ற பல பெட்டிகள் தோண்டி எடுக்கப்பட்டன. இவைகளை எடுத்துக்கொண்டு மலையினர் தங்களின் இருப்பிடத்தை நோக்கி முல்லை வாசிகளிடமிருந்து விடை பெற்று சென்றனர். அந்த பெட்டிகளில் என்ன உள்ளது என்பது மர்மம்தான். மலையில் ஏறும்போது அதன் ஒளி விண்ணை பிளந்தது பிரபஞ்சத்தில் பிரதிபலித்தது. வானில் பறகலனில் தோல்வியால் திரும்பிகொண்டிருந்த வேற்றுலக வாசிகளின் கலனிலும் இவ்வொளி பிரதிபலித்தது. அதைக்கண்ட வேற்றுலக தலைவன் மீண்டும் வருவோம் இதை அடைய என்று கர்ஜித்துகொண்டே பயணத்தை தொடர்ந்தான்.

மலையினர் தலைவன் வானை பார்த்து மீண்டும் வந்தால் மாண்டு போவாய் என்று கூறிவிட்டு மலை ஏறினர்.

இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் Share செய்யுங்கள். இதன் இரண்டாம் பாகம் வேண்டுமென்றால் Comment செய்யுங்கள். இதில் உள்ள மர்மங்கள் இரண்டாம் பாகத்தில் வெளியிடப்படும். அதோடு உங்கள் கேள்விகளையும் Comment செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post
Support @Amazon